நீயா நானா மருத்துவர்கள் சிறப்பு நிகழ்ச்சியால் வந்த வினை!
எனக்கு தெரிஞ்ச மருத்துவர்கள் எல்லோருமே கடவுள் தான்!!! எந்த கடவுள் வேணும்ன்னு நம்ம வசதிக்கேத்த மாதிரி நாம தான் தேர்ந்து எடுத்துக்கனும்.. சரியா?
தெருக்கோடி மருத்துவர் = முச்சந்தி பிள்ளையார்/அம்மன்...
அவசர பிரச்சனைகளை கவனிப்பார்கள். குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். இடப் பற்றாக்குறை உண்டு.
குடும்ப மருத்துவர் = குல தெய்வம்/சிறு தெய்வங்கள்
நம்ம வரலாறு நல்லா தெரியும். இருக்கின்ற காசை கொடுத்தால் போதும். பொறுமையா பிரச்சனைகளை கேட்பாங்க. நம்பி போகலாம். சரியாகலைனா உரிமையா சண்டை கூட போடலாம்.
சிறப்பு பட்டமும் பெரிய விளம்பரமும் இல்லாததால் குறைந்த அளவு கூட்டம் மட்டுமே உண்டு.
சிறப்பு மருத்துவர் = குறை தீர்க்கும் தெய்வங்கள் (திருநள்ளாறு, திருநாகேசுவரம்,...)
குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் வல்லவர்கள். எளிதில் பார்க்க முடியாது. எதற்கும் பார்த்து வைத்து விடலாம் என்றே எல்லோரும் செல்வதால் கூட்டத்திற்கும் வசூலிற்கும் குறைவில்லை.
சமீப காலங்களில் மிகவும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் சக்தி படைத்தவர்களாக மாறியுள்ளார்கள்.
பல்துறை சிறப்பு மருத்துவமனை = பெருந்தெய்வங்கள் (பழனி, திருப்பதி,..)
குறைந்தது ஒரு நாளில்லாமல் பார்த்து வர முடியாது. அதுவும் மூலவரை எளிதில் பார்க்க இயலாது. சில பல படிகள் தடைகள் தாண்டித்தான் பார்க்க முடியும்.பார்த்தாலும் பொறுமையாக எல்லாம் பேச முடியாது. பார்த்தோமா வந்தோமா என்று இருக்க வேண்டும்.
எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தியுண்டு என்று சொல்லப்படுகிறது. நமக்கே தெரியாதவற்றை கூட!!!
இனி உங்கள் கடவுளை நீங்களே முடிவு செய்யுங்கள்!!!